திருக் கார்த்திகை நாளில் எந்த நேரத்தில் விளக்கு ஏற்றவேண்டும்?
திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள்.
அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாவண்ணம் தடுக்கிறது.
இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
விளக்கேற்றும் நேரம்
சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும்.
முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம்.
வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும்.
விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம்.
வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும்.
அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும்.
இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.