கார்த்திகை தீபத்தன்று மறந்தும் இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்
திருக்கார்த்திகை தீபம் என்பது இறைவனை ஒளி வடிவமாக வழிபடும் திருநாளாகும். இந்த நாளில் வீடு முழுவதும் விளக்கேற்றி வழிபடுவதால் நன்மைகள் அதிகரிக்கும். இது இறை அருளையும், செல்வ நலன்களையும் பெறுவதற்கான நாளாகும்.

திருக்கார்த்திகை தீபத் திருநாள் சிவ வழிபாட்டிற்கு மட்டுமின்றி, மகாலட்சுமியை வழிபட்டு, அவரின் அருளை முழுவதுமாக பெறுவதற்குரிய சக்தி வாய்ந்த நாளாகும். இதனால் இந்த நாளில் மறந்தும் கூட சில தவறுகளை செய்து விடக் கூடாது.

திருக்கார்த்திகை தீபம் அன்று செய்யக் கூடாத 3 தவறுகள்
திருக்கார்த்திகை தீபத் திருநாள் அன்று எந்த காரணத்திற்காகவும் வீட்டில் விளக்கேற்றாமல் இருளாக இருக்கும் படி செய்யக் கூடாது. திருக்கார்த்திகை அன்று நீங்கள் வெளியூர் செல்வதாக இருந்தாலோ அல்லது ஆன்மீக பயணம் செல்வதாக இருந்தாலோ கூட பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அல்லது உங்களின் உறவினர் யாரையாவது வீட்டில் இருக்கச் செய்து விளக்கேற்றி வைக்க செய்யலாம். அவர்களால் உங்கள் வீட்டில் இருக்க முடியா விட்டாலும், வீட்டு வாசலில் மட்டுமாவது விளக்கேற்றி வைக்கச் சொல்லலாம். பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடா விட்டாலும், வீட்டு நிலைவாசலில் மட்டுமாவது இரண்டு அகல் விளக்குகள் எரியும் படி செய்ய வேண்டும்.

திருக்கார்த்திகை தீபம் அன்று விரதம் இருப்பது சிறப்பு. அப்படி விரதம் இருக்க முடியவில்லை என்றால் சைவமாக சாப்பிட்டு, இறை வழிபாட்டினை மேற்கொள்ளலாம். மறந்தும் கூட இந்த நாளில் அசைவம் சாப்பிடக் கூடாது. அது மிகப் பெரிய பாவமாகும்.

திருக்கார்த்திகை தீபம் அன்று யாரிடமும் கடன் வாங்கக் கூடாது. மளிகைக் கடையிலோ அல்லது வேறு ஏதாவது பொருட்கள் வாங்கினால் கூட பணம் கொடுத்து தான் அந்த பொருளை வாங்க வேண்டுமே தவிர, கடனாக ஒரு போதும் வாங்கக் கூடாது. திருக்கார்த்திகை திருநாள் என்பது மகாலட்சுமியை வீட்டில் எழுந்தருளச் செய்து, அவளின் அருட்கடாட்சத்தை பெறுவதற்கான நாளாகும். இதனால் மகாலட்சுமி மனம் மகிழும் படியான விஷயங்களை மட்டுமே இந்த நாளில் செய்ய வேண்டும்.
