தமிழ் அரசியல்வாதிகளிடம் கலாநிதி அறுதிருமுருகன் முன்வைத்த கோரிக்கை!
அழிக்கப்பட்ட ஆலயங்களை மீளக்கட்டுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் ஏனைய ஆலயங்களை விடுவிக்க தமிழ் அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் செஞ்சோற்செல்வர் கலாநிதி அறுதிருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
ஊடக அறிக்கை
இலங்கை சைவமக்களின் மிகத்தொன்மை வாய்ந்த வரலாற்றிடம் கிரிமலை இப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயரமான மலை போன்ற ஒரு பாறைப்பகுதியில் ஆதிசிவன் கோயில் அமைந்திருந்தது.
ஆனால் அச்சிவன் கோயில் தற்போது இல்லை என்று அங்கு போய் வந்த அன்பர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்கள். மேலும் பெருமைமிக்க பெண் சித்தரான சடையம்மாவின் சமாதி கோயில் மடம் அதற்கருகிலிருந்த சங்கர சுப்பையர் சுவாமிகளின் சமாதி கதிரைவேலன் கோயில் இவற்றைக் காணவில்லை. இது சைவ மக்களுக்கு மிகவும் அதிர்ச்சியை தந்துள்ளது.
சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின்பு ஆலயத்தை தரிசிக்கலாம் என்று சென்ற மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்தது. எனவே இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை பதிலளிக்க வேண்டும்.
அதோடு தமிழ்ப் நாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாலயங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அழிக்கப்பட்ட கோயில்கள் இருந்த இடத்தை சைவமக்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
மீண்டும் அந்த இடங்களில் சைவமக்கள் கோயில்களைக் கட்டுவதற்கான அனுமதியை உடன் வழங்க வேண்டும். தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயம் தொடர்பாக உடன் குரல் கொடுக்க வேண்டும்.
மேலும் வட மாகாண ஆளுனர் பொதுமக்கள் தங்கள் நிலங்களை பார்வையிடுவதற்கும் அங்கு எஞ்சியுள்ள கோவில்களை தரிசிப்பதற்கும் ஒழுங்கு செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.