திடீரென பல்டி... முக்கிய முடிவை எடுத்துள்ள ஜே.வி.பி!
நாளைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe) நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்து கொள்வதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.
இந்தக் கூட்டம் அனைத்துக் கட்சி அரசு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக நடத்த திட்டமிடப்பட்டது.
மாறாக ஜே.வி.பி.யின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, (Anura Kumara Dissanayaka) ஜனாதிபதியிடம் எழுத்துமூலமான யோசனைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜே.வி.பி. நாளை கலந்துரையாட இருந்தது.
இருப்பினும், ஜே.வி.பி.யின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunnetti) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
ஜே.வி.பி அனைத்து கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவோ அல்லது இணைந்து கொள்ளவோ போவதில்லை.
“ஜனாதிபதி ஏற்கனவே அரசாங்கத்தை நியமித்துள்ள நிலையில், சர்வகட்சி அரசாங்கம் என்று பேசி என்ன பயன். இடைக்கால அரசாங்கம் குறித்த அவரது பேச்சுக்கள் முடிந்துவிட்டன” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
விரைவில் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கக்கூடிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
அவர் உருவாக்க உத்தேசித்துள்ள சர்வகட்சி அரசாங்கம் அவரது அதிகாரத்தை வலுப்படுத்தும் மற்றும் கடன்களைப் பெறுவதற்கான சர்வதேச நம்பிக்கையை வெல்லும் என்பது தெளிவாகிறது என்று ஹந்துன்நெத்தி கூறினார்.
இது மக்களின் ஆணையைப் பெற்றுள்ள சர்வகட்சி அரசாங்கம் அல்ல எனத் தெரிவித்த அவர், அவ்வாறான அரசாங்கத்திற்கு ஜே.வி.பி ஆதரவளிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.