கொழும்பில் உயிர் மாய்த்த மாணவி அம்ஷிகாவுக்கு நீதி கிடைக்குமா?
கொழும்பு கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 16 வயது மாணவியான தில்ஷி அம்ஷிகா, கடந்த 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்டார்.
அவர் வசித்த வந்த முதலாம் மாடியில் இருந்து 6வது மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்து இவ்வாறு அவர் உயிரை மாய்த்துக்கொண்டிருந்தார். குறித்த மாணவி மாடியிலிருந்து விழுவது அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியிருந்தது.
அடுக்குமாடி கட்டிடத்திற்கு அருகிலுள்ள வீதியில் விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்தார்.
பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி கற்று வந்த தங்களின் மகள் துஷ்பிரயோகத்தினால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியே அகால மரணடைந்ததாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவரே இந்த துஷ்பிரயோக சம்பவத்தில் ஈடுபட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியிருந்தாலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் குறித்து அவர்கள் இன்னும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கவில்லை.
இறந்த மாணவியின் தாய் கூறும் போது, "பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை. எனது மகள் பொய் கூறுவதாக பாடசாலை தரப்பில் கூறப்பட்டது. அதனால் நான் ஒரு வைத்தியரிடம் சென்ற போது அது நிரூபிக்கப்பட்டது." என்றார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு தனது மகள் மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்ததாக மாணவியின் தாய் கூறுகிறார். கடந்த ஆண்டு நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் மீண்டும் அவரை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
இதன் விளைவாக அவருடைய நிலை மோசமடைந்ததாக அவளுடைய பெற்றோர் கூறுகிறார்கள். இந்த சம்பவம் குறித்து எமது செய்தி சேவை விசாரித்தபோது, மாணவியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஆசிரியர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, தற்போது பிணையில் வெளியே வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக சுமார் 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இருப்பினும், மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் மேலதிக வகுப்பு ஆசிரியர் குறித்து சிறுமியின் மரணம் வரை பொலிஸில் எந்தப் முறைப்பாடும் பதிவு செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சூழலில், குறித்த சிறுமி கடைசியாக வசித்து வந்த கொட்டாஞ்சேனையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் முன் இன்று காலை சிவில் செயற்பாட்டாளர்கள் குழு ஒன்று போராட்டம் நடத்தியது.
இந்த தற்கொலைக்கு நீதி வழங்குமாறு அதிகாரிகளிடம் அவர்கள் இதன்போது வலியுறுத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டோர் சிறுமி உளவியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் மேலதிக வகுப்பு இடம்பெறும் நிறுவனத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அந்தக் குழு மாணவி துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மேல் மாகாண பதில் கல்விப் பணிப்பாளர், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் உடனடியாக இடமாற்றம் செய்யப்படுவார் என்றும், நாளை பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவார் என்றும் உறுதியளித்தார்.
பின்னர் அந்தக் குழுவினர் ஜனாதிபதி செயலகத்திற்கு பேரணியாகச் சென்று, தங்களுக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் என்று கோரினர். இதற்கிடையில், இன்று பாராளுமன்றத்திலும் இந்த சம்பவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.