சாந்தனின் நாடு கடத்தல் வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி விலகல்
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தனின் நாடு கடத்தல் வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தர் மோகன் அறிவித்துள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன.
வழக்கறிஞராக இருந்தபோது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானதால், தற்போது வழக்கை தான் விசாரிப்பது முறையாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் பரிசீலிக்கப்படவில்லை
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு மே 21ம் திகதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 7 பேரும் கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் வல்வெட்டியில் வசிக்கும் தனது 75 வயதுடைய தாயார் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதால், தாம் உடனடியாக இலங்கை செல்ல விரும்புவதாக சாந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சாந்தன் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மனு வழங்கியுள்ளதாகவும், தனது பிரதிநிதித்துவங்கள் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை என்றும் சாந்தன் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தனது மகனை நாட்டுக்கு மீள அழைக்குமாறு சாந்தனின் தாயார் ஜனாதிபதி ரணில் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.