இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட ஜவான் எங்கே: 14 வருட முடிவிலும் தேடலில்!
புலிகளின் குரல் மற்றும் தமிழீழ வானொலிகளின் பொறுப்பாளர் என்று அனைவராலும் அறியப்பட்டவர். சிறந்த புகைப்படப்பிடிப்பாளர். அதை விட பல்துறைக்கலைஞர். ஊடகத்தின் அடிமுதல் நுனிவரை ஆழம் தெரிந்தவர் என மக்களால் அறியப்படுவர் ஊடகவியலாளர் நாகரத்தினம் சற்சுதன் என்னும் ஜவான் அவார் காணாமல் போய் 14 ஆண்டுகள் நிறைவடைந்தாக முகநூல் நபர் பதிவிட்டுள்ளார்.
1990 நவம்பர் 21 ஆம் நாளின் முதலாவது ஒலிபரப்பில் இருந்து இறுதியாக 2009 மே மாதத்தின் 15 ஆம் நாள் இரவு வரை புலிகளின் குரல் வானொலியை தடை இன்றி ஒலிக்க வைத்த பெருமைக்குரியவர்.
“ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைக்குரலாகவும், எதிரியின் பொய்மைக்கு எதிரான, உண்மைக்குரலாகவும், ஓங்கி ஒலிக்கவேண்டும்!” என்ற தேசியத்தலைவர் அவர்களின் விருப்பத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஊடகமாக புலிகளின் குரல் ஜவான் அண்ணாவால் நிர்வகிக்கப்பட்டது.
ஒவ்வொரு இடம்பெயர்வு வேளைகளிலும் ஒரு நாள் கூட இடைவிடாத ஒலிபரப்புசேவை ஜவான் அண்ணாவாலும் அவர் வளர்த்த போராளிகள் மற்றும் பணியாளர்களாலும் மக்களுக்காக வழங்கப்பட்டதை மறுக்க முடியாது.
ஓரிடத்தில் காலை ஒலிபரப்பு நடந்தால் மாலையில் இன்னொரு இடத்தில் பனைமரத்தில் ஒலிபரப்பு சாதனத்தை உயர்த்தி வைத்து கட்டி ஒலிபரப்பை செய்த வரலாறுகள் உண்டு. அவ்வாறான ஊடகவியலாளர் ஜவான் அண்ணா. சண்டை களங்களுக்கு பின் நிக்காதவர்.
கேணல் கிட்டு அவர்களால் புடம்போடப்பட்டு வளர்க்கப்பட்டதாலோ என்னவோ சண்டைக் களங்கள் அவருக்கு மிக பிடித்தமானவை. ஒரு கால் இல்லாது போனாலும் களமுனைகளுக்கு நேரடியாக சென்று களத்தில் நிற்கும் போராளிகளது நேர்காணல்களை எடுத்து அவற்றை மக்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பார்.
அவ்வாறான ஒரு உன்னத போராளி. அவர் நினைத்திருந்தால் வேறு ஒரு போராளியை அங்கே அனுப்பி இருக்க முடியும் ஆனால், அவர் அதை விரும்புவதில்லை நேரடியாக தானே அப்பணியை செய்வார்.
எனக்கும் அவருக்கும் இடையிலான உறவு நான் நினைக்கிறேன் 1999 இற்கு பின்பான காலம் தான் வன்னிப்பெருநிலப்பரப்பெங்கும் வானொலி மன்றங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் மற்றும் மாணவர்களது நிகழ்வுகள் தினமும் ஒலிபரப்பப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதே அவரை சந்தித்தேன்.
எங்களை நெறிப்படுத்துவார். கவிதை வாசிக்கும் போது ஏற்ற இறக்கங்களைத் தானே சொல்லித் தருவார் எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு பல விடயங்களை கற்றுத்தருவார். அதனூடாக நாம் கொஞ்சம் என்றாலும் எம்மை நாமே கற்றுக் கொள்ள வழி தந்தார்.
பின் நாட்கள் எங்காவது சந்திக்கும் போதெல்லாம் அப்பா பற்றியும் என்னைப் பற்றியும் விசாரிக்கத் தவறுவதில்லை. இறுதியாக நான் நினைக்கிறேன். முல்லைத்தீவின் சுனாமி வீட்டுத் திட்டப் பகுதியில் தணியரசன் அண்ணையை சந்திக்க சென்ற போது ஜவான் அண்ணாவை சந்தித்தேன்.
முகம் வழமை போல் இல்லை. வழமையாக தவழும் புன்னகை இல்லை. இருந்தாலும் நலவிசாரிப்பில் குறை இல்லை. ஒலிபரப்பிலும் தடங்கல் இல்லை. இறுதியாக “ பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகுமிடம் தெரியாமல் “ என்ற பாடலை ஒலிபரப்பும் வரை அவரது புலிகளின் குரல் ஓயவும் இல்லை.
அவரும் இப்போது எம்மோடு இல்லை அவர் உருவாக்கிய வளர்த்த வானொலியும் இன்று எம்மோடு இல்லை. அவர் மகளோடு காணாமல் ஆக்கப்பட்டு இன்று 14 வருடங்கள் கடந்து செல்கின்ற என யாழில் வந்து வரும் Ratnam Kavimahan என்பவர் முகநூலில் இந்த பதிவை ஈட்டுள்ளார்.