இலங்கை இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்; அழைப்பு விடுக்கும் முக்கிய நாடு!
ஜப்பானில் உணவுப் பொருட்கள் தொடர்பான ஐந்தாண்டு இலவச பயிற்சித் திட்டத்தை பூர்த்தி செய்யும் இலங்கை இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக ஜப்பானிய பிரதிநிதிகள் இலங்கை வந்தடைந்தனர்.
கடந்த 05ஆம் திகதி இவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கைக்கான ஜப்பான் தூதுவரின் தலையீட்டிலும் ஜப்பானில் வசிக்கும் வண. சுதுஹும்பொல விமலசார தேரரின் ஒருங்கிணைப்பு மற்றும் அனுசரணையுடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஏற்கனவே கொழும்பு, குருநாகல், காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களில் இளைஞர்கள் குழுவொன்று இந்த இலவச பாடநெறிக்காக பயிற்சி பெற்று வருகின்றது.
இந்நிலையில் இலங்கை வந்துள்ள ஜப்பானியப் பிரதிநிதிகள் இங்கு ஆறு நாட்கள் தங்கியிருக்கும் போது பயிற்சி நிலையங்களை மேற்பார்வை யிடுவார்கள்.
இந்தப் பயிற்சி நிலையங்கள் போட்டிப் பரீட்சை நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பின்னர் அவர்கள் ஜப்பானில் இலவச ஐந்தாண்டு பாடநெறிக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகின்றது.
உலகெங்கிலும் இருந்து தெரிவு செய்யப்படவுள்ள இத்திட்டத்துக்கு இலங்கையிலிருந்து முதல் தொகுதி மாணவர்களைத் தெரிவு செய்ய ஜப்பான் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.