ரயில் கடவைக்கு அருகில் சோதனையில் சிக்கிய ஜீப் வண்டி ; மருந்து கடையிலும் விடுதியிலும் காத்திருந்த அதிர்ச்சி
பெரியமுல்ல, ஏத்துக்கால ரயில் கடவைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான ஜீப் வண்டி ஒன்றைச் சோதனையிட்டபோது, அதில் பயணித்த நபர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், சந்தேகநபருக்குச் சொந்தமான மருந்தகம் ஒன்றைச் சோதனையிட்டபோது அங்கிருந்து 1,000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

ஜீப் வண்டி சோதனை
நேற்று (09) அதிகாலை குற்றத்தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நீர்கொழும்பு பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகத்தின் குழுவொன்றினால் இந்த ஜீப் வண்டி சோதனையிடப்பட்டது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் கஞ்சா, 01 கிராம் கொக்கைன் மற்றும் 100 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர் நீர்கொழும்புப் பகுதியைச் சேர்ந்த 32 வயதானவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது, அவர் தங்கியிருந்த விடுதி அறையிலிருந்து 29 கிராம் 240 மில்லி கிராம் குஷ் போதைப்பொருளும், 02 கிராம் 230 மில்லி கிராம் அடையாளம் காணப்படாத போதைப்பொருளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.