யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொலைக் களமா? மக்கள் கேள்வி!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிசாரின் அடாவடியான செயற்பாடுகளுக்கும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி வேண்டி இன்றையதினம் (22) மூளாய் பகுதி மக்கள், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
மூளாயில் உள்ள மதுபான நிலையம் ஒன்றிற்குள் இடம்பெற்ற மோதல் சம்பவமே கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வன்முறைக்கு காரணமாக அமைந்துள்ளது.
தூக்கி போடுவோம் என மிரட்டல்
மதுபான நிலையத்தில் வைத்து எமது பகுதியைச் சேர்ந்தவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டபோது மூளாய் பகுதியை சேர்ந்த இன்னொருவர் எழுந்து ஏன் அவரை தாக்குகின்றீர்கள் என கேட்டபோது அவரையும் தாக்கி படுகாயம் ஏற்படுத்தினர்.
இதனால் தாக்குதலுக்கு உள்ளானவரின் மகன்கள் இருவர் மதுபான நிலையத்திற்கு கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டனர்.
பின்னர் காயமடைந்த மூளாய் பிரதேசத்தை நேர்த இருவரும் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு வந்து பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு பதிவு செய்ய சென்றபோது பொலிஸார் முறைப்பாட்டை பதிவு செய்யவில்லை.
ஆனால் தாக்குதல் நடாத்திய ஒருவரை கைது செய்து வைத்திருந்ததுடன், விசாரணை செய்யுமாறு கோரியபோது எங்களை பொலிஸ் நிலையத்தில் இருந்து விரட்டியடித்தனர்.
பின்னர் எமது பகுதியைச் சேர்ந்த ஒருவர் வேலை முடிந்து வரும்போது மற்றைய குழுவினர் பிடித்துச் சென்று அவர்மீது கொடூர தாக்குதல் நடாத்திய நிலையில் பொலிஸார் அவரை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றவேளை ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளானதால் அவர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தார்.
மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை
அவரை வைத்தியசாலைக்கு அனுப்புமாறு கோரியவேளை பொலிஸார் தாகாத வார்த்தையால் எம்மை திட்டி, எம்மையும் இப்படித்தான் தாங்கள் தாக்கிவிட்டு உள்ளே தூக்கி போடுவோம் என மிரட்டல் விடுத்தனர்.
பின்னர் நாங்கள்தான் நோயாளர் காவு வண்டியை அழைத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். இதற்கு பின்னர்தான் ஞாயிற்றுக்கிழமை கலவரம் ஏற்பட்டதாகவும் மூளாய் மக்கள் தெரிவிக்கின்றனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி வந்த பின்னர் பொலிஸ் காவலில் வைத்து ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டதாகவும், பல குற்றச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
எனவே தற்போதுள்ள பொலிஸ் பொறுப்பதிகாஇயை நீக்கி , ஒரு திறமையான பொறுப்பதிகாரியை வட்டுகோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வழங்மாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களையும், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரையும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகரையும், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியையும், அழைத்த யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கடுமையாக எச்சரித்து, உடனடியாக சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.
அதேவேளை கடந்த ஞாயிற்று கிழமை (20) மூளாயில் இடம்பெற்ற கலவரத்தில் பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.