பாடசாலைக்குள் கள்ளத்தனம் எதற்கு; யாழ் பிரபல பாடசாலை மாணவர்கள் வீதிக்கு இறங்கி போராட்டம்!
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (11) மதியம் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலை முடிவடைந்ததும் பாடசாலை பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய உயர்தர மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமாதானபடுத்திய கோட்டக் கல்வி பணிப்பாளர்
பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரொருவர் பாடசாலைக்கும், பாடசாலை அதிபருக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக செயல்பட்டதாக தெரிவித்தே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போதே பாடசாலைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தாதே, கற்பிக்க வந்த இடத்தில் கள்ளத்தனம் எதற்கு, பாடசாலைக்குள் நடப்பது பாடத்திட்டமா அல்லது படப்பிடிப்பா போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் தாங்கியிருந்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தெல்லிப்பழை கோட்டக் கல்வி பணிப்பாளர் வே.அரசகேசரி மாணவர்களுடன் கலந்துரையாடியதை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.