அலைக்கழிக்கும் அரச பேருந்தால் யாழ்ப்பாணம் மக்கள் ஆவேசம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இருந்து 08.30 மணிக்கு மருதங்கேணிக்கு வருகை தரும் அரச பேருந்து மக்களை நீண்ட நேரம் காக்கவைத்து அலைக்கழிப்பது தொடர்பாக மருதங்கேணியில் இன்று(26) முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பருத்தித்துறையிலிருந்து கேவில் நோக்கி காலை 8.30 மணிக்கு புறப்படும் அரச பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மருதங்கேணி பகுதிக்கு வருகை தந்து அங்கே 40 நிமிடங்களுக்கு மேலதிகமாக தரித்து நிற்கின்றது.

இதனால் உரிய நேரத்துக்கு செல்ல வேண்டிய மக்கள், வேலை ஆட்கள், மாணவர்கள் பாதிப்படைகின்றனர்.
குறித்த அரச பேருந்தானது அதிக நேரம் காத்திருப்பதால் ஏனைய பேருந்துகள் மற்றும் ஆட்டோ சாரதிகள் பாதிப்படைகின்றனர்.
நேரத்தை கடைப்பிடிக்காமல் தான்தோன்றித்தனமாக மக்களை அலைக்கழிக்கும் அரச பேருந்து மீது நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை போக்குவரத்து சபை இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் பயணிகள் பலமுறை கேட்டுக் கொண்டனர்.
ஆனால் எந்தவித உரிய நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இன்றும் அதே அரச பேருந்து மருதங்கேணி பகுதியில் பல நிமிடங்கள் தரித்து நின்றதால் மக்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
வடமராட்சி கிழக்கின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜூவன் எம்பி இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்