யாழ் அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் காலமானார்!
யாழ்ப்பாணம் குப்பிளானை சேர்ந்த சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும் அரசியல் ஆய்வாளருமான சி.அ. யோதிலிங்கம் உடல்னல குறைவு காரணமாக காலமானார்.
வயிற்றில் ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பன்முக திறமைகள் கொண்டவர்
தமிழ் மக்களும் தமிழ் தேசமும் எதிர்கொண்ட பெரும் ஆபத்துகளையும், எதிர்காலத்தில் வரவிருந்த அரசியல் அபாயங்களையும் முன்னறிந்து எச்சரிக்கும் ஆற்றல் கொண்ட சிந்தனையாளராக சி.அ. யோதிலிங்கம் திகழ்ந்தார்.
ஆரம்பத்தில் ஆசிரியராகவும், பின்னர் சட்டத்தரணியாகவும் பணியாற்றிய இவர், மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் செயற்படத் தூண்டுவதற்காகத் தனது பொதுப்பணியை முன்னெடுத்தார்.
தமிழ் தேசியம், தமிழ் இறையாண்மை மற்றும் சுயநிர்ணய உரிமைக்காகத் தீவிரமாகச் செயற்பட்ட இவர், புவிசார் அரசியல், உலகளாவிய அரசியல் போக்குகள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான மிகவும் சிக்கலான விடயங்களைச் சாதாரண மக்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம் தனது எழுத்துக்கள் மற்றும் கருத்துரைகள் மூலம் எடுத்துரைக்கும் அசாத்திய திறனைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அதேவேளை சிரேஷ்ட அரசியல் ஆய்வாளரும் சிந்தனையாளருமான ஜோதிலிங்கத்தின் மறைவு தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு எனத் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டுள்ள விசேட இரங்கல் செய்தியில், ஜோதிலிங்கம் வெறும் ஆசிரியராகவோ வழக்கறிஞராகவோ மட்டுமன்றி, தமிழ் மக்களின் எதிர்காலம், தமிழ் தேசியம் மற்றும் தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமை குறித்து ஆழமாகச் சிந்தித்த சிறந்த சிந்தனையாளராகத் திகழ்ந்தார் எனக் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் எதிர்கொண்ட அரசியல் ஆபத்துகளை முன்கூட்டியே கணித்து, பொதுமக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவர் தொடர்ந்து செயற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புவிசார் அரசியல், உலக அரசியல் போக்குகள் மற்றும் பேரினவாதம் போன்ற சிக்கலான விடயங்களைச் சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் தனது எழுத்துகள் மூலம் தெளிவுபடுத்தும் ஆற்றல் அவருக்கு இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜோதிலிங்கத்தின் மறைவால் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் பெரும் இழப்பை உணர்வார்கள் எனத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட முறையிலும், தமிழ் தேசிய பேரவை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாகவும் தனது இரங்கலையும் மரியாதையையும் தெரிவிப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.