வெறிச்சோடி காணப்படும் யாழ்ப்பாணம்! தீவிர கண்காணிப்பில் பொலிஸார்
இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை இரண்டு தினங்களும் மேலாக முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த ஊரடங்கு உத்தரவை மீறி இன்றைய தினம் மக்கள் பல பகுதியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதோடு வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்படுகின்றது.
நேற்று மாலை 6 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

யாழ்ப்பாண நகருக்குள் நுழையும் பிரதான சந்திகள், வீதிகள் பொலிஸார் ஆங்காங்கே நின்று வீதியால் செல்பவர்களை துருவித்துருவி விசாரித்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவை மற்றும் தனியார் போக்குவரத்து சேவை என்பன இடம்பெறவில்லை என்பதுடன் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக பேரணிகள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்படலாம் என்பதால் அதனை தடுக்கும் வகையில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதுடன் நிலையில் பொலிஸார் தீவிரமாக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

