19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண இலங்கை குழுவில் இடம்பிடித்த யாழ் வீரர்கள் ; பட்டியல் வெளியானது
ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக இந்த வருடம் நடைபெறவுள்ள 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் பெயரிடப்பட்டுள்ள 15 வீரர்களில் யாழ். வீரர்கள் இருவர் இடம்பெறுகின்றனர்.
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் வீரரும் தற்போது மருதானை புனித சூசையப்பர் கல்லூரியில் இணைந்துள்ளவருமான விக்னேஸ்வரன் ஆகாஷ், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர் 1 குகதாஸ் மாதுளன் ஆகிய இருவரே 19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாத்தில் இடம்பெறும் யாழ். வீரர்களாவர்.

இலங்கை குழு
துபாயில் கடந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் இடம்பெற்ற 11 வீரர்கள், உலகக் கிண்ண குழாத்திலும் பெயரிடப்பட்டுள்ளனர்.
நால்வர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை திரித்துவ கல்லூரி விக்கெட் காப்பாளர் ஆதம் ஹில்மி, வெஸ்லி கல்லூரி வீரர் ஜீவன்த ஸ்ரீராம் ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.
19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக றோயல் கல்லூரி வீரர் விமத் தின்சார தொடர்ந்தும் செயற்படவுள்ளார்.
பதினாறு அணிகள் 4 குழுக்களில் பங்குபற்றும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஜனவரி 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஏ குழுவில் இலங்கை இடம்பெறுகின்றது.
இலங்கை சுற்றுலா இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஜப்பான் அணியை ஜனவரி 17ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது. தொடர்ந்து 19ஆம் திகதி அயர்லாந்தையும் 23ஆம் திகதி அவுஸ்திரேலியாவையும் இலங்கை சந்திக்கும்.
இலங்கையின் குழு நிலைப் போட்டிகள் யாவும் நமிபியாவில் விண்ட்ஹோக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
19 வயதின்கீழ் இலங்கை குழாம் விமத் தின்சார (அணித் தலைவர் - றோயல் கல்லூரி), கவிஜ கமகே (உதவித் தலைவர் - கிங்ஸ்வூட் கல்லூரி), திமன்த மஹாவித்தான, ஆதம் ஹில்மி, செத்மிக்க செனவிரட்ன (மூவரும் திரித்துவ கல்லூரி), விரான் சமுதித்த, சமரிந்து நெத்சார (இருவரும் மாத்தறை சென். சேவேஷியஸ் கல்லூரி), துல்னித் சிகேரா, சாமிக்க ஹீனட்டிகல (இருவரும் மஹாநாம கல்லூரி), குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி), ரசித் நிம்சார (வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை), விக்னேஸ்வரன் ஆகாஷ், சேனுஜ வேக்குனாகொட (இருவரும் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி), ஜீவன்த ஸ்ரீராம் (வெஸ்லி கல்லூரி), மலின்த சில்வா (மொறட்டுவை புனித செபஸ்தியார் கல்லூரி)