கழுத்தினால் உழவு இயந்திரத்தை இழுத்து உலக சாதனை படைத்த யாழ். முதியவர்!
யாழ்ப்பாணத்தில் உழவு இயந்திரத்தை 50 மீற்றர் தூரம் வரை தனது கழுத்தினால் இழுத்து முதியவரொருவர் சாதனை படைத்ததுடன் அது உலகசாதனைப் பத்தகத்திலும் பதிவானது.
இன்றையதினம் (14-04-2024) மாலை நடைபெற்ற 2600 கிலோ எடையுடைய உழவு இயந்திரத்தை தனது கழுத்தினால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார்.
யாழ் தென்மராட்சியைச் சேர்ந்த செல்லையா திருச்செல்வம் தனது தாடியால் பட்டா ரக வாகனத்தை ஏற்கனவே இழுத்து பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
உலக சாதனை படைத்துள்ள திருச்செல்வத்தின் தொடர் முயற்சிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்திலும் வலுச் சேர்த்துள்ளார்.
இதற்கு முன்னர் திருச்செல்வத்தின் முயற்சிகள் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கில் அவரை ஊக்குவிக்கும் முகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு காலி முகத்திடலில் 1000 மீற்றர் தூரத்திற்கு 1550 கிலோ கிராம் எடையுடைய பட்டா ரக வாகனத்தை 500 மீற்றர் தூரம் தாடியாலும், 500 மீற்றர் தூரத்தை தனது தலை முடியாலும் இழுத்து திருச்செல்வம் அந்த முயற்சியினூடாக உலக சாதனையை நிகழ்த்தினார்.
இந்நிலையில் இன்று யாழ்ப்பாணத்தில் திருச்செல்வம் தனது மற்றுமொரு உலகசாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியிருந்த நிலையில் அதனையும் ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் வகையில் அமைச்சர் குறித்த நிகழ்விடத்திற்கு சென்றிருந்தார்.
குறித்த சாதனை படைத்த திருச்செல்வத்திற்கு அனுசரணை வழங்கியிருந்த நிறுவனத்தால் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் அவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.