இரவோடு இரவாக நிறுவப்பட்ட விளம்பரப் பலகை ; யாழ் மாநகர சபை முதல்வரின் அதிரடி பேச்சு
யாழ். மாநகர சபையின் அனுமதியில்லாமல் பிரதான வீதி ஒன்றில் நாட்டப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரப் பலகை தொடர்பில் தாம் அனுமதி வழங்கவில்லை என யாழ் மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் சபைக்கு தெரிவித்தனர்.
நேற்று (04) வியாழக்கிழமை யாழ். மாநகர சபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வில் சபை உறுப்பினர்களான தர்ஷானந்த் மற்றும் நிசாந்தன் ஆகியோர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பிலே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
அண்மையில் யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் வீதிக்கு மேலாக தனியார் நிறுவனம் ஒன்றின் பாரிய விளம்பரப் பலகை ஒன்று இரவோடு இரவாக நிறுவப்பட்டது.
குறித்த விளம்பரப் பதாகை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.
சபையில் அனுமதி பெறாது குறித்த விளம்பரப் பலகை பொருத்தப்பட்டமை தொடர்பில் சபை உறுப்பினர்களால் மாநகர முதல்வருக்கு தெரியப்படுத்திய நிலையில் மறுநாள் இரவு குறித்த பதாகை இரவோடு இரவாக அகற்றப்பட்டது.
இவ்வாறான நிலையில் நேற்றைய சபை அமர்வில் குறித்த விடயம் பேசுபொருளாக அமைந்த நிலையில் குறித்த விளம்பரப் பலகை அமைப்பதற்கு தாங்கள் அனுமதி வழங்கவில்லை என யாழ். மாநகர முதல்வர் மதிவதனி மற்றும் ஆணையாளர் கிஷ்ணேந்திரன் ஆகியோர் சபையில் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாது குறித்த விளம்பரப் பலகை அமைப்பதில் ஊழல் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அது தொடர்பில் கணக்காய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு அனுப்பப்படும் என முதல்வர் தெரிவித்ததுடன் உறுப்பினர்கள் சார்பாக இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு கையளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.