யாழ். போதனா வைத்தியசாலை அசமந்தத்தால் கை இழந்த சிறுமி; நீதி கோரும் பெற்றோர்
யாழ். போதனா வைத்தியசாலையில், மருத்துவத் தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமது மகள் கையை இழந்து தவிக்கும் அவலநிலைக்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் நீதிகோரியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி வைத்தியசாலை பணிப்பாளருக்கு கடிதமொன்றை அவர்கள் அனுப்பியுள்ளனர்.
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பங்கள் இடம்பெறக்கூடாது
அத்துடன் பணிப்பாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதிகளை வடமாகாண ஆளுநர் , மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் , வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் , இலங்கை மருத்துவ சங்கம் , யாழ்.மாவட்ட செயலர் , தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை , சுகாதார அமைச்சு, பெண்கள், சிறுவர் விவகார அமைச்சு ஆகிய தரப்புக்களுக்கும் அவர்கள் அனுப்பியுள்ளனர்.
குறித்த கடிதத்தில் ” எமது மகளின் இந்நிலைக்கு 12ஆம் விடுதியின் தாதிய உத்தியோகத்தர்களும், வைத்தியர்களும், வைத்திய நிபுணரும் வைத்தியசாலை நிர்வாகமுமே காரணமாகும்.
எனவே எமது மகளுக்கு நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக குறித்த தாதிய உத்தியோகத்தரை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும், சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், விடுதிக்குப் பொறுப்பான வைத்திய சிகிச்சை நிபுணர் அனைவருக்கும் எதிராக உரிய விசாரணைக்கு உத்தரவிடப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
அத்துடன் என் பிள்ளைக்கு ஏற்பட்ட உடல் உளரீதியான மீள முடியாத தாக்கத்திற்காகவும் எமக்கும் எமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட மீள முடியாத தாக்கத்திற்காகவும் தங்களிடமிருந்து நீதியான விசாரணையையும் நியாயமான தீர்ப்பையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.
விசாரணை முடிவில் குறித்த சம்பவத்துக்கான (கை அகற்றப்பட்டதற்கான) சரியான மருத்துவ காரணத்தையும் எழுத்து மூலம் அறியத்தர வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
அதோடு , எதிர்காலத்தில் இவ்வாறான மருத்துவ நிராகரிப்புக்களினால் உயிர் இழப்புக்கள் அவய இழப்புக்கள் ஏற்படா வண்ணம் எங்களுடைய சமூகத்தை பாதுகாக்கும்படி பாதிக்கப்பட்ட எங்களது குழந்தையின் சார்பில் வேண்டி நிற்கின்றோம் எனவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.