யாழ் இளைஞனின் வெளிநாட்டு ஆசை; பெரும் தொகை சுருட்டிய மதபோதகர்!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை வெளிநாடு ஒன்றிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 15 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் , நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த மதபோதகர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு மதபோதகரால் ஏமாற்றப்பட்டுள்ளார். குறித்த போதகர் இளைஞரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 15 இலட்ச ரூபாய் பணத்தினை மத போதகர் பெற்றுள்ளார்.
காசோலை மோசடி
எனினும் நீண்ட நாட்கள் ஆகியும் வெளிநாட்டு பயணம் சரி வராததால், கொடுத்த பணத்தினை இளைஞன் திருப்பி கேட்ட போது , போதகர் காசோலையை வழங்கியுள்ளார். அந்த காசோலையை வங்கியில் வைப்பு செய்த போது கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்பியுள்ளது.
அது தொடர்பில் போதகரை இளைஞன் தொடர்பு கொண்டு கேட்ட போது, தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் , தன்னால் என்னவும் செய்ய முடியும் என இளைஞனை மிரட்டியுள்ளார்.
அதனை அடுத்து இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , நீர்கொழும்பில் வைத்து போதகரை கைது செய்த பொலிசார் யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர்.
அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் போதகரை முற்படுத்திய போது , அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.