அதிகாரத்தை தமிழருக்கு கொடுத்தால் ஆபத்து! முக்கியஸ்தர் விடுத்த எச்சரிக்கை
விடுதலைப் புலிகளின் தலைவரால் தனது வாழ்நாளில் செய்ய முடியாத ஒரு செயலை 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒரு வார்த்தையில் செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) குற்றம் சுமத்தியுள்ளார்.
வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மகாவலி அதிகார சபையின் காணிகளை கூட பகிர்வதற்கான அதிகாரம் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். இதனால், ஏற்பட போகும் ஆபத்தை பேராசிரியர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) நேற்று தெளிவாக விளக்கியிருந்தார்.
மகாவலி அதிகார சபை காணி அனுமதிப்பத்திரங்களையே வழங்கும். பிரதேச செயலாளர் வழங்கினால், சொந்தமாக காணி உறுதியுடன் காணிகளை வழங்குவார். அரசுக்கு சொந்தமான காணியை பிறருக்கு பகிரும் அதிகாரத்தை ஒரு நபருக்கு வழங்குவது பெரிய ஆபத்து.
அப்படி நடந்தால், அரசியல்வாதிகள், அவர்களின் அடிவருடிகள், தரகர்களுக்கு தேவையான வகையிலேயே காணிகள் பகிரப்படும். அப்படியானால், வடக்கு கிழக்கில் எப்படி காணிகளை பகிர்வார்கள் என்று எண்ணிப்பாருங்கள் என அவர் கூறினார்.
குறிப்பாக வடக்கில் எப்படி காணிகள் பகிரப்படும் என்பதை எம்மால் எண்ணிப்பார்க்க முடியும்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால், 30 ஆண்டு யுத்தத்தில் செய்ய முடியாமல் போனதை வரவு செலவுத்திட்டத்தில் ஒரு வார்த்தையில் நாம் செய்வது முழு இனத்தையும் காட்டிக்கொடுக்கும் செயல்.
விவசாயிக்கு காணியை சொந்தமாக வழங்கினால், அவர் தனிப்பட்ட உரிமையாளராக மாறுவார். அவரது காணிக்கு அரசாங்கம் எந்த நிவாரணங்களையும் வழங்காது. கடனையும் பெற முடியாது. உர மானியம் உட்பட எதுவும் வழங்கப்பட மாட்டாது.
வடக்கு, கிழக்குக்கு அதிகாரத்தை பகிர்ந்தால், அந்த பிரதேசம் பிரிந்து செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகம். மாவட்டங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தால், இலங்கையின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும்.
இலங்கையின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே இந்தியாவின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.