ஈரானில் இஸ்ரேல் அமெரிக்கா கூட்டு தாக்குதல் ; 500 இற்கும் அதிகமானோர் பலி; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உலகிற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 555ஆக உயர்ந்துள்ளதாக ஈரான் ரெட் கிரசென்ட் அமைப்பு அறிவித்துள்ளது.
மேலும் 800-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதால் ஈரானில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 555ஆக உயர்வு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை அடுத்து, பதிலடி கொடுக்கும் நோக்கில் ஈரான் ராணுவம் குவைத், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கி வருகிறது.
அதேசமயம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகள் ஈரானையும் தாக்கி வருகின்றன. மாறிமாறி நடத்தப்படும் தாக்குதல் காரணமாக, பொதுமக்கள் அதிகமாக கொல்லப்பட்டுவரும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தசூழலில் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 500க்கும் மேற்ப்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் வான்வழித் தாக்குதலால், ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 555ஆக உயர்ந்துள்ளதாக ஈரான் ரெட் கிரசென்ட் அமைப்பு அறிவித்துள்ளது.
இதற்கிடையே, ஈரானின் இடைக்கால பாதுகாப்புத் துறை அமைச்சராக, ஜெனரல் செய்யத் மஜித் இப்னு ரெசா நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்நாட்டின் உச்ச தலைவர் காமேனி, பாதுகாப்புத் துறை அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே உள்ளிட்டோர் அமெரிக்கா - இஸ்ரேலின் கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், அமெரிக்கா துருப்புக்களின் நிலைகள மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.