இஸ்ரேல் - லெபனான் மோதல்; 32 இலங்கையர்கள் தூதரகத்தில் தஞ்சம்
இஸ்ரேல் - லெபனான் மோதல் காரணமாக 32 இலங்கையர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை தூதரகம் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதோடு,அப்பகுதியில் உள்ள இலங்கையர்களுடன் தொடர் தொடர்பைப் பேணி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கான விமானங்கள் நேற்று மீண்டும் ஆரம்பம்
இதேவேளை, இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கான விமானங்கள் வழமையாக இயங்க ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால் இரண்டு நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த டுபாய் மற்றும் அபுதாபியிலிருந்து இஸ்ரேலுக்கான விமானங்கள் நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலுக்குச் செல்லத் திட்டமிடுபவர்கள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் அவர்களின் விமானங்களின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சரிபார்க்குமாறு தூதரகம் அறிவுறுத்தியது.
இஸ்ரேலிய தாக்குதல்களின் விளைவாக 127 குழந்தைகள் மற்றும் 261 பெண்கள் உட்பட 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லெபனான் முழுவதும் ஹெஸ்புல்லாவின் பேஜர்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை குறிவைத்து இஸ்ரேலின் ஒழுங்கமைக்கப்பட்ட தாக்குதல்களால் மோதல் போக்கு மேலும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.