இலங்கையில் தீவிரமாக தேடுப்படும் இந்த தமிழர் யார்? வெளியான அதிர்ச்சி பின்னணி
நாட்டில் பொலிஸாரால் தீவிரமாக தேடப்படும் நபருக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் கூலித்தொழிலாளி செய்துவரும் 46 வயதான ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெராட் என்பவரே குற்ற புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வருகிறார்.
சமீபத்தில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகளான இலங்கையை சேர்ந்த 4 பேர்தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கமைய குறித்த சந்தேக நபரை கண்டறியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 23ஆம் திகதி வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த 34 வயதுடைய நபரொருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்தியாவில் கைது இலங்கையர்களில் ஒருவருடன் அக்குழுவினர் இந்தியா செல்வதற்கு முந்தைய நாள் அவர் தொலைபேசியில் பேசியதும், நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவில் மீண்டும் ஆஜராகுமாறு குறித்த நபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் சமீபத்தில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
4 பேருக்கும் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததால், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, தற்போது குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புடையவர்கள் இலங்கைஇல் இருக்கின்றார்களா என உறுதிப்படுத்துவதற்காக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.