இலங்கையில் அனைத்துக் கட்சி ஆட்சியா?...வெளியான தகவல்
இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா கேட்டுக் கொண்டார். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், மக்கள் வாழ முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மக்கள் வீதியில் இறங்கி போராட ஆரம்பித்தனர். பிரச்சனை வலுத்து வரும் நிலையில் இலங்கை அரசு நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. மேலும் போராட்டங்களை தடுக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்கள் படும் துன்பங்கள் வேதனை அளிப்பதாக தெரிவித்து அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி விலகியுள்ளார். இந்நிலையில், இலங்கையில் அனைத்து கட்சி அமைச்சரவையை அமைக்க முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஆலோசனை வழங்கினார்.
பொருளாதார நெருக்கடி ஆழமடைந்து வருவதால், நிலைமையை சமாளிக்க அரசாங்கம் அத்தகைய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை என்றால் ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் சிறிசேன கூறினார்.
நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தை அமைக்குமாறு கோருவதற்கு மத்திய குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரும் வெளிவிவகார அமைச்சருமான தயாசிறி ஜயசேகர வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
14 உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரிய கட்சியாக உள்ளது. பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் தற்போது அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளது.