அரசாங்கத்தின் மமதைப் பேச்சுக்களால் நன்மைகளை இழக்கும் மக்கள் ; எதிர்கட்சி சாடல்
சுகாதார அமைச்சுக்கு அளவுக்கதிகமாக நிதி ஒதுக்கப்படுவதாகவும், அதனால் தமக்கு நிதி உதவிகள் தேவையில்லை என்றும் கூறும் சுகாதார அமைச்சரிடம் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான தீர்வு இருக்கிறதா? இவ்வாறான மமதைப் பேச்சுக்களால் மக்களுக்கு கிடைக்கவிருக்கும் நன்மைகளையும் இழக்க வேண்டியேற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
குருணாகலில் வெள்ளிக்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் முதலாவது எழும்பு மஜ்ஜை பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். இந்த சிகிச்சைக்காக இந்தியாவுக்கு சென்றால் ஒரு கோடியே 50 இலட்சம் வரை செலவாகும்.
தேவையேற்படின் இதனை தம்மால் நிர்வகித்துச் செல்ல முடியும் என்று இராணுவம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் எந்தளவு பெருமை பேசிக் கொண்டிருந்தாலும் கிராம மட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் இன்னும் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது.
சிறுநீர் பரிசோதனையைக் கூட தனியார் மருந்தகங்களிலேயே எடுக்க வேண்டியுள்ளது. 5000க்கும் மேற்பட்ட இதய நோயாளர்கள் சத்திர சிகிச்சைகளில் பங்கேற்க முடியாத நிலைமையில் இருக்கின்றனர்.
2026ஆம் ஆண்டு வரை மருந்து தட்டுப்பாடு நிலவும் என்று துறைசார் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால் சில தனியார் நன்கொடையாளர்கள் தாமாக முன்வந்து சில உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
எந்தவொரு சுகாதார அமைச்சரும் இது தொடர்பில் பேசவில்லை. மருந்து தட்டுப்பாட்டுக்கு அப்பால் வைத்தியசாலைகளில் மேலும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவ்வாறான நிலைமையிலேயே தற்போதைய சுகாதார அமைச்சர் எமக்கு பணம் தேவையில்லை, அளவுக்கு அதிகமாகவே சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கப்படுவதாகக் குறிப்பிடுகின்றார்.
ஆனால் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தற்போது நிவாரணங்களை வழங்கக் கூடியளவுக்கு அரசாங்கத்தின் நிதி நிலைமை இல்லை எனக் கூறுகின்றார்.
இருவரில் யார் கூறுவது உண்மை எனத் தெரியவில்லை. சுகாதார அமைச்சரது மமதைப் பேச்சுக்களால் மக்களுக்கு கிடைக்கவிருக்கும் நன்மைகளையும் இழக்க வேண்டியேற்படும் என்றார்.