100 மேற்பட்ட குழந்தைகளின் உயிரை வாங்கிய syrup இலங்கையில் உள்ளதா?(Video)
இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரி காவு வாங்கிய மருந்து திரவங்கள் இலங்கையில் பயன்பாட்டில் இல்லை என தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உயர்தர மருந்துகள் மாத்திரமே இறக்குமதி
மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடுமையான விதிமுறைகளை கருத்திற்கொண்டு உயர்தர மருந்துகளை மாத்திரமே இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், காம்பியாவில் ஒரு வகை இருமல் மருந்து காரணமாக 70 குழந்தைகள் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
அதன் பின்னர் இந்தோனேசியாவில் சிரப் மற்றும் மருந்து திரவங்களால் சுமார் நூறு குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்தோனேசிய அதிகாரிகள் நடத்திய சோதனையில், சிரப் ஒன்றில் சிறுநீரகத்துக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த மருந்தைப் பெற்ற 200 குழந்தைகளை பரிசோதித்ததில் அவர்களுக்கு சிறுநீரக கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.