அரசியலுக்கு முழுக்கு போடுகின்றாரா ரணில் விக்ரமசிங்க?
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்புக்கு தடையாக மாறினால், எந்த நேரத்திலும் தாம் கட்சித் தலைமையிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக கொழும்பு தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க . நேற்று (17) இடம்பெற்ற கட்சி செயற்குழு கூட்டத்தில் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

எந்த நேரத்திலும் கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயார்
ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு நேற்று பிற்பகல் பிட்டகோட்டேயில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் கூடியது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒத்துழைப்பு பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதற்காக பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அதுகோரல மற்றும் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோர் அடங்கிய குழுவை ஐக்கிய தேசியக் கட்சி நியமித்துள்ளது, அதே நேரம் ஐக்கிய மக்கள் சக்தி விவகாரங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையாண்டு வருகிறார்.

அந்தக் கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்த அதிகாரபூர்வ அறிக்கை இன்னும் தனக்கு கிடைக்கவில்லை என்றும், தொடர்புடைய கலந்துரையாடல்களை மிக விரைவில் முடிக்க வேண்டும் என்றும், இனி அவற்றை இழுத்தடிக்க நேரமில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க செயற்குழுவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அடுத்த ஆண்டு முதல் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வலுவான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதால் மேற்கண்ட விடயங்களை விரைவுபடுத்த வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அந்த விவாதங்களின் போது ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைய வேண்டும் என்று ஒரு உடன்பாடு எட்டப்பட்டால், அதனை ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு விரும்பினால், அது தனக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது என்று இங்கு குறிப்பிட்ட ரணில் , ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைய வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் ரணில் தலைமைப் பதவியில் இருந்து விலகி சஜித் அல்லது வேறு ஒருவருக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்ற முன்மொழிவு முன்வைக்கப்பட்டால், எந்த நேரத்திலும் கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் இங்கு கூறினார். "நான் நீண்ட காலமாக கட்சித் தலைவராக இருந்து வருகிறேன்.
நாட்டின் ஜனாதிபதியானேன். நான் மிக உயர்ந்த நிலையை அடைந்துவிட்டேன். மேலும், நாடு ஒரு கடினமான தருணத்தில் இருந்தபோது, நான் பொறுப்பேற்றுக் கொண்டு நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எடுத்தேன்.
எனவே, இந்த இராஜினாமாவில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இது விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.