ஒற்றை ஏவுகணையால் உலக நாடுகளை நடுங்க வைத்த ஈரான் ; குறிவைக்கப்பட்ட அமெரிக்காவின் முக்கிய தளம்
ஈரானின் 4,000 கி.மீ துார ஏவுகணை தாக்குதல் முயற்சி உலக நாடுகளை வியப்படைய செய்துள்ளது. மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த போர், 20 நாட்களை கடந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, இந்திய பெருங்கடலில், தியாகோ கார்சியா தீவில் உள்ள, அமெரிக்க - பிரிட்டன் தளத்தை குறிவைத்து ஈரான் இரு நடுத்தர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவியதாக கூறப்படுகிறது.

இரு மடங்கு துாரம்
இந்த இரு ஏவுகணைகளில் ஒன்று தோல்வி அடைந்ததாகவும், மற்றொன்று இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தோல்வி அடைந்தாலும், ஈரானின் ஏவுகணை தாக்குதல் துாரம் உலக நாடுகளிடையே ஆச்சரியத்தையும், கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது
ஈரானில் இருந்து தியாகோ கார்சியா தீவு 4,000 கி.மீ., தொலைவில் உள்ளது. தங்களிடம், 2,000 கி.மீ. துாரம் வரை சென்று தாக்கும் திறனுள்ள ஏவுகணைகள் மட்டுமே இருப்பதாக ஈரான் தெரிவித்திருந்தது.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான கடற்படைத் தளமாக டியாகோ கார்சியா தளம் கருதப்படுகிறது.
இந்நிலையில், இரு மடங்கு துாரம் சென்று தாக்குதல் நடத்த முயன்றிருப்பது, உலகிற்கு தெரியாத மற்றும் அறிவிக்கப்படாத திறன்களை ஈரான் கொண்டுள்ளதையே காட்டுவதாகக் கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்காவின் விலை உயர்ந்த பாதுகாப்பு அமைப்பான, எஸ்.எம்., 3 அமைப்பை செயல்பட வைத்ததே ஈரானின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.