திருகோணமலை உப ஒன்றுகூடல் மண்டபத்தில் திரையிடப்பட்ட திரைப்படம்!
திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என் ஜயவிக்ரம தலைமையில் நேற்று (15-06-2023) காலை 9.30 மணிக்கு "INVICTUS" எனும் திரைப்படம் திரையிடப்பட்டது.
ஜனாதிபதி சட்டத்தரணியான கலாநிதி விஜயதாச ராஜபக்ச அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் zoom தொழில்நுட்பம் மூலம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டி எழுப்புகின்ற நோக்கில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது.
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினால் இந் நிகழ்ச்சித்திட்டம் பிரதம செயலாளர் அலுவலகங்கள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் ஆகிய அலுவலகங்களில் ஒரே நேரத்தில் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்காவில் நடந்த கறுப்பு வெள்ளை இன மோதலை தீர்த்து வைத்த ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் சமூக தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு கிளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கிய திரைப்படமே "INVICTUS" ஆகும்.
இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.