களுத்துறை மாணவி மரணமடைந்த ஹோட்டல் தொடர்பில் விசாரணை
களுத்துறை பாடசாலை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய களுத்துறை நகரின் மத்தியில் அமைந்துள்ள ஐந்து மாடி ஹோட்டல் தர நிர்ணயத்திற்கு அமைய கட்டப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவை நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் நேற்று (11) நகர அபிவிருத்தி அதிகார சபையின் களுத்துறை மாவட்ட அலுவலகத்தின் தலைவர்களுக்கு வழங்கினார்.
கட்டிட உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னர் அதனை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு அனுப்பி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என நம்புவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கூறினார்.
உரிய தரமற்ற மற்றும் அனுமதியின்றி உரிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டால் கட்டிட உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற ஐந்து மாடி ஹோட்டல் களுத்துறை நகரின் மையப்பகுதியில் மிகவும் குறுகிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய கட்டிடத்தை கட்டும் போது அனுமதி மற்றும் ஆலோசனைக்கு பல நிறுவனங்களைக் கலந்தாலோசிக்க வேண்டும்.
கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்களின் தரத்தை அறிவியல் பூர்வமாக உறுதி செய்வதும் அவசியம். கட்டடம் கட்டுவதற்கு முன், உள்ளூராட்சி நிறுவகத்திடம் அனுமதி பெற வேண்டும்.
இந்த அனுமதியைப் பெறுவதற்கு அந்தந்த உள்ளூராட்சிகளின் சிறப்பு சட்டங்கள் உள்ளன.
அதன்படி, காணி மற்றும் வீடு அல்லது கட்டிடத்தின் திட்டத்தை சமர்ப்பித்த பிறகு, கட்டுமானம் தொடர்பான அடிப்படைத் திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் அல்லது சம்பந்தப்பட்ட உள்ளூராட்சியிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும் எஅவும் அவர் குறிப்பிட்டார்.