இன்றுமுதல் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து; சேவையில் 110 புகையிரதங்கள்
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ள நிலையில் , 110 புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளன.
அதன்படி காலை மற்றும் மாலை அலுவலக சேவைக்காக 110 புகையிரத பயணங்கள் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்படும் என புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார். மாகாணங்களுக்கிடையிலான புகையிரத போக்குவரத்து சேவை தொடர்பில் வினவிய போது அவர் இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய மாகாணங்களுக்கிடையில் பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவையினை கருத்திற் கொண்டு மாகாணங்களுக்கிடையில் புகையிரத போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று காலை 4.30 மற்றும் காலை 5 மணிக்கு கண்டி- கொழும்பு கோட்டைக்கு இரண்டு புகையிரங்களும், காலை 4.30 மணிக்கு பெலியத்தை - மருதானை, காலை 5 மணிக்கு காலி - மருதானை வரை ஒரு புகையிரதம் சேவையில் ஈடுப்படும்.
அத்துடன் சிலாபம் ,மஹவ ஆகிய பகுதிகளிலும் இருந்து காலை அலுவலக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடும் எஅவும் அவர் கூறினார்.
மேலும், சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பொதுபயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்துவது அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.