இணை சுகாதார நியமனங்கள் தொடர்பில் இடைக்கால தடை உத்தரவு
இணை சுகாதாரத் துறைக்கு அமைவான வைத்திய ஆய்வக உடலியக்க வியளாலர்கள் நியமனங்கள் வழங்குவதைத் தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (27) இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.
இந்த மனு மீண்டும் 11 ஆம் திகதி விசாரணைக்கு வர உள்ளதுடன், அந்த திகதி வரை இந்த நியமனங்கள் வழங்குவது தொடர்பில் தற்போதைய நிலையே தொடரும் என்று நீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நியமனத்தால் பாதிக்கப்பட்ட 270 பட்டதாரிகள் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் அமர்வால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ரஜீவ அமரசூரிய முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
இதன் மூலம் வெளிநாட்டு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், இதன் ஊடாக தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, குறித்த நியமனங்கள் வழங்குவதை தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறும் நீதிமன்றத்தில் கோரப்பட்டது.