இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர் தொடர்பில் வெளியான தகவல்!
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர் எந்தவொரு கொரோனா தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர் என தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆபிரிக்காவில் இனங்காணப்பட்ட அபாயம் மிக்க 'ஒமிக்ரோன்' பிறழ்வு நேற்றைய தினம் இலங்கையிலும் முதன்முறையாக இனங்காணப்பட்டுள்ளது.
நைஜீரியாவிலிருந்து வருகை தந்த இலங்கை பெண்ணொருவரின் மாதிரியிலேயே 'ஒமிக்ரோன்' பிறழ்வு இனங்காணப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தந்த பின்னர் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டதால் கொவிட் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அதன் பின்னர் குறித்த பெண் நேற்று முன்தினமே தனது வசிப்பிடத்திற்குச் சென்றுள்ளார். இதன் காரணமாக அவரது குடும்பத்தார் உள்ளிட்ட அவருடன் நேரடி தொடர்பைப் பேணிய அனைவரது மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
அத்தோடு இவ் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு விசேட கண்காணிப்பிற்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். 'ஒமிக்ரோன்' தொற்றுக்கு உள்ளாகியுள்ள யுவதி 25 வயதுடைய , மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர் என்று ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
குறித்த யுவதி நவம்பர் 24 ஆம் திகதி நாட்டுக்கு வருகை தந்த போது , பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை குறித்த பெண் நைஜீரியாவிலிருந்தே வருகை தந்துள்ளார் என்பதோடு , எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவராவார் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இவர் எந்தவொரு தடுப்பூசியையும் பெறாதவர் என்பதால் விமான நிலையத்திலேயே பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன் போதே அவருக்கு தொற்றுறுதி செய்யபட்டுள்ளது. குறித்த பெண் இலங்கைக்கு வருவதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து வருகை தராவிட்டாலும் , மேற்கு ஆபிரிக்காவிலிருந்து வருகை தந்தமையால் விசேட கண்காணிப்பில் கீழ் கொவிட் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
தொற்று அறிகுறிகள் குறைவடைந்ததையடுத்து நேற்று முன்தினம் பெண் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். வீட்டிலும் அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனவே அவரிடமிருந்து பாரதூரமானளவிற்கு 'ஒமிக்ரோன்' ஏனையோருக்கு பரவியிக்கக் கூடிய வாய்ப்புக்கள் குறைவாகும்.
அதற்காக யாருக்குமே பரவியிருக்காது என்றும் கூற முடியாது என்றும் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இதேவேளை தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு 'ஒமிக்ரோன்' தொற்று ஏற்படக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும் , தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டால் பாரிய அபாயத்திலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.