வெளிநாட்டிற்கு தப்பி சென்ற பொலிஸ் அதிகாரி தொடர்பில் வெளியான தகவல்கள்
கடமையில் இருந்தபோது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் டுபாய்க்கு தப்பிச் சென்ற சம்பவமொன்று கொழும்பு கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.
அவர் வைத்திருந்த T 56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஜே.ஏ.கே.ஏ. ஜெயக்கொடி என்பவர், நேற்று (08) கஹவிட்ட மாவத்தைக்கு அருகிலுள்ள வீதிச் சோதனையில் இரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
நேற்று (08) மாலை 6 மணி முதல் இன்று (09) காலை 6 மணி வரை வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குறித்த கான்ஸ்டபிள், மாலை 5.30 மணியளவில் ஆயுதக் களஞ்சியசாலையில் இருந்த 28045840 என்ற எண் கொண்ட T-56 ரக துப்பாக்கியுடன் 30 தோட்டாக்களையும் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
இருப்பினும், கான்ஸ்டபிள் வீதிச் சோதனை நடவடிக்கைக்காக பணிக்கு சமூகமளிக்காததால், பொலிஸார் அவரது கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு விடுத்த போதிலும் அவர் பதிலளிக்கவில்லை.
குறித்த கான்ஸ்டபிள் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறும்போது குறிப்புகள் அல்லது பணியில் இருந்த அதிகாரிக்கு தகவல் வழங்கவில்லை. பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய்க்கு சென்றுள்ளமை தெரியவந்தது.
சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிள், கல்கிஸை பொலிஸ் நிலையத்திலிருந்து அத்திடிய பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்று, உடைகளை மாற்றிக்கொண்டு, பெல்லந்தொட்ட சந்திக்குச் சென்றுள்ளார்.
அங்கிருந்து வாடகை சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான வெகன்ஆர் காரில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரால் எடுத்துச் செல்லப்பட்ட துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் அவை பணத்திற்கு விற்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேகநபரான கான்ஸ்டபிளுக்கு வெளிநாட்டில் இருக்கும் படோவிட்ட அசங்க என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் உட்பட பல பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகள் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அனுராதபுரம், பேமடுவ, கஹலம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபர், சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு பொலிஸ் துறையில் சேர்ந்தார்.
மேலும் அவர் ஐஸ் போதைப்பொருளுக்கு அதிக அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது.