சிலண்டர் வெடிப்பு தொடர்பில் அமைச்சர் டக்ஸ் வெளியிட்ட தகவல்!
இலங்கையில் அண்மையில் வழமைக்கு மாறாக சமையல் எரிவாயு சிலிண்டர்களை வெடிப்பு சம்பவங்கள் பதிவாகின்றமையை ஏற்றுக் கொள்வதைப் போலவே, இவ்விடயம் தொடர்பான பொறுப்பு கூறலிலிருந்தும் அரசாங்கம் ஒருபோதும் விலகாது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்கிழமை (30) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இதனை அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் இதுகுறித்து தெரிவித்தது,
நுகர்வோர் பாதுகாப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் , 2015 - 2021 செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை அண்மித்த 233 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அந்த தரவினை அடிப்படையாகக் கொண்டு 6 வருடங்களுக்கு மதிப்பிடும் போது வருடாந்தம் 35 - 40 வெடிப்புக்கள் அதாவது மாதாந்தம் 3 - 4 வெடிப்புக்கள் மாத்திரமே பதிவாகியிருக்க வேண்டும்.
எனினும் இம்மாதத்தில் அந்த எண்ணிக்கைக்கு அப்பால் வழமைக்கு மாறாக அதிகளவான வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனவே தான் அதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாகக் கூறுகின்றோம்.
எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் வெளியிடப்படும் தவறான செய்திகளின் காரணமாகவே மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. பொலன்னறுவையில் இடம்பெற்ற சம்பவம் இதற்கு சிறந்த உதாரணமாகும். அத்தோடு சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்பில் ஒழுங்குறுத்தல் நிறுவனமொன்று நாட்டில் நியமிக்கப்படாமையும் பாரிய குறைபாடாகும்.
விபத்துக்கள் இடம்பெற்றால் அது தொடர்பில் பரிசோதிப்பதற்கு அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அதிகாரம் காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் எரிவாயு சிலிண்டருக்குள் காணப்படும் உள்ளடங்கங்கள் தொடர்பில் மதிப்பிடுவதற்கான நிறுவனம் நாட்டில் இல்லை. எனவே தான் எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு இதன் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்பான ஒழுங்குறுத்துகை நிறுவனம் இல்லை என்பதால் எம்மால் பொறுப்பு கூற முடியாது என்று அரசாங்கம் ஒருபோதும் பொறுப்பிலிருந்து விலகாது. இது எமது பொறுப்பாகும்.
இவ்வாறான சம்பவங்கள் பதிவாக முன்னரே கடந்த செப்ரெம்பர் 21 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவினால் (lasantha alagiyawanna) எரிபொருள் தொடர்பான ஒழுங்குறுத்துகை நிறுவனமொன்றை நியமிப்பது தொடர்பான விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.
அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. பரிசோதனைக்கு வழங்கப்பட்டுள்ள மாதிரிகள் தொடர்பான முடிவுகள் துரிதமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.
நாட்டில் கடந்த இரு வாரங்களாக தொடர்ச்சியாக சமையல் எரிவாயு கசிவினால் வெடிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகிக்க கொண்டிருக்கின்றன. இம்மாதத்தில் மாத்திரம் இவ்வாறு 12 சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.