இலங்கையில் சிறுவர்களிடையே தீவிரமாகப் பரவும் நோய்கள்! வைத்திய நிபுணர் விடுத்த எச்சரிக்கை
நாட்டில் உள்ள சிறுவர்களிடையே ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசம் சார்ந்த நோய் நிலைமைகள் அதிகரித்து வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த நோயின் அறிகுறிகளாக இருமல், சுவாசிப்பதில் சிரமம், இருமலுடன் வாந்தி வெளியேறல் போன்றவை காணப்படுகின்றன.
நாட்டின் பல பகுதிகளில் தற்போது பரவிவரும் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலின் பின்னரும் இவ்வாறாக சிறுவர்களுக்கு ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது.
தூசி அதிகம் உள்ள வீடுகளிலும், புகைபிடிக்கும் பெரியவர்கள் வசிக்கும் வீடுகளிலும் உள்ள சிறுவர்களுக்கு இவ்வாறு ஆஸ்துமா நோய் ஏற்படும் அபாயம் அதிகமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், இந்த நிலைமை குறித்து அச்சமடைய தேவையில்லை எனவும் முறையான சிகிச்சையின் மூலம் இதனைக் குணப்படுத்த முடியும் எனவும் வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒரு வாரம் அல்லது 2 வாரங்களுக்கு மேலாக இருமல் நீடிக்குமாயின், வைத்தியரை நாடி சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
சில நேரங்களில் இது சயரோகத்துக்கான அறிகுறிகளாகவும் காணப்படக்கூடும் எனவும் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.