சந்திராயன் 3 இற்காக உலகவாழ் இந்தியர்கள் பிரார்த்தனை!
சந்திரயான்-3 விண்கலம் இன்று (23 ஆகஸ்ட்) மாலை 6 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குகிறது.
இந்நிலையில் நிலவில் இந்தியாவின் சந்திராயன் 3 இன் லாண்டரை தரையிறக்கும் பணி வெற்றிகரமாக இடம்பெற வேண்டும் என இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் பல பாகங்களிலும் வசிக்கும் இந்தியர்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நிலவுக்கான இஸ்ரோவின் இரண்டாவது முயற்சி தோல்வியடைந்தது முதல் தனது அடுத்த முயற்சிக்காக இஸ்ரோ கடும் உழைப்பில் ஈடுபட்டது.
இதனையடுத்து சந்திராயன் 3 இன் லாண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்குவதை உறுதிசெய்வதற்காக அவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த கனவு நனவாக வேண்டும் என இந்தியர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.
வாரணாசி முதல் லண்டன், அமெரிக்கா வரை பிரார்த்தனை
வாரணாசி முதல் லண்டன், அமெரிக்கா வரை வசிக்கும் ஒவ்வோர் இந்தியரும் இன்று மாலை வரப்போகும் 6 மணிக்காக காத்திருக்கின்றனர். இதற்காக உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் இந்து மதகுருமார் யாகத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைனி பக்தர்கள் ஸ்ரீ மகா காளீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜையில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரகாண்டின் ரிசிகேசில் உள்ள பரமாத் நிகேதனில் 'கங்கா ஆரத்தி' என்ற வித்தியாசமான வழிபாடு இடம்பெற்றது. இந்திய கொடியை கையில் ஏந்தியவாறு மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
அதேசமயம் இதற்கு முன்னர் ஹவன் பூஜை என்ற வெற்றிக்கான பிரார்த்தனை பூஜையொன்றும் இடம்பெற்றது.
அமெரிக்காவின் நியுஜேர்சியில் ஓம் ஸ்ரீ பாலாஜி ஆலயத்திலும் மொன்ரோவில் உள்ள கலாசார நிலையத்திலும் இந்திய அமெரிக்க சமூகத்தினர் இஸ்ரோவின் வெற்றிக்காக பிரார்த்திக்கின்றனர்.
லக்னோவின் இஸ்லாமிய நிலையத்தில் இஸ்லாமிய மக்கள் தொழுகையில் (நமாஸ்) ஈடுபட்டனர்.
இந்தியாவின் நிலவை நோக்கிய பயணத்தின் வெற்றிக்காக, இந்தியர்கள் மத எல்லைகளை கடந்து பிரார்த்தனை செய்கின்ற நிலையில் , சந்திராயன் 3 லாண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்குவதை காண உலகமே ஆவலுடன் காத்திருக்கின்றது.