இந்திய பிரஜைகள் இலங்கை வரலாம்; ஆனால் இது கட்டாயம்
கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் பெற்ற இந்திய பிரஜைகள் இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
அத்துடன் ஏனைய நாட்டவர்கள் தடுப்பூசி பெறாமலும் இலங்கைக்கு வருகை தரலாம் என்றும் ஆனால் இங்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே அவர்கள் சுற்றுலாவை தொடர அனுமதியளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது, ஆனால் விமான நிலையங்கள் மூடப்படவில்லை. ஆகவே வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகள் நாட்டுக்கு வருகை தரலாம். எனினும் ஒரு சில நாட்டு சுற்றுலாப்பிரயாணிகள் நாட்டுக்க வருவதற்கு விதிக்ப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கப்படும்.
கொவிட்-19 தடுப்பூசிகள் இரண்டடையும் பெற்றுக் கொண்ட இந்திய சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தரலாம், சமூகத்துடன் தொடர்புக் கொள்ளலாம். ஏனைய நாட்டு பயணிகளும் இலங்கைக்கு வருகை தரலாம்.
நாட்டுக்கு வருகை தந்ததன் பின்னர் பி. சி. ஆர் பரிசோதனை எடுக்கப்படும். பரிசோதனையின்பெறுபேற்றில் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே அவர்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும். இதற்காக 22 சுற்றுலா மையங்கள் விசேடமாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பிரயாணிகள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமையவே செயற்பட வேண்டும்.
மேலும் சுற்றுலாப்பிரயாணிகள் தங்குமிடம், மற்றும் சுற்றுலாபயணங்கள் மேற்கொள்ளும் இடங்கள் ஆகியவை முழுமையாக கண்காணிக்கப்படும் என்றும், சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய சுற்றுலாத்துறை சேவையினை முன்னெடுத்து செல்வது கட்டாயமாகும் எனவும் அவர் கூறினார்.