இந்தியா - பாகிஸ்தான் மோதல் ; சர்வதேச விமானப் போக்குவரத்திலும் பெரும் தாக்கம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள கடும் மோதல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்திலும் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பல ஆசிய விமான நிறுவனங்கள், ஐரோப்பா நோக்கி இயக்கப்படும் தமது விமானங்களின் போக்குவரத்து வழித்தடங்களை மாற்றியமைத்துள்ளது. அதேவேளை விமானங்களின் போக்குவரத்து , சிலவற்றை இரத்து செய்வதாகவும் தெரிவித்துள்ளன.
ஐரோப்பா நோக்கிய விமானங்களின் வழித்தடம் மாற்றம்
அணுஆயுத சக்தி கொண்ட இந்த இரு நாடுகளுக்கிடையே, கடந்த இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தானை தாக்கியதாக செய்திகள் வெளியானது.
பின்னர், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஐந்து இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தது. இது சர்வதேச விமானப் போக்குவரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த மோதல் காரணமாக, பல்வேறு ஆசிய விமான நிறுவனங்கள், தங்களின் ஐரோப்பா நோக்கிய விமானங்களின் வழித்தடத்தை மாற்றியுள்ளதோடு, சிலவற்றை நேரடியாக இரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளன.
அந்தவகையில், தாய்வானைச் சேர்ந்த EVA Air நிறுவனம், பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்தியா – பாகிஸ்தான் பகுதியில் உள்ள விமான வழிதடத்தை தவிர்க்கும் வகையில், ஐரோப்பா நோக்கிய விமானங்களை மாற்றியமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், வியன்னாவிலிருந்து புறப்பட்ட விமானம், மீண்டும் அந்நகரத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டதோடு, தாய்பே – மிலான் விமானம் வியன்னாவை அடைந்த பின் எரிபொருள் நிரப்பிய பின்னர் பயணத்தை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கொரியன் ஏர் – இன்சியான் (சீயூல்) – டுபாய் விமானங்களை பாகிஸ்தானைத் தவிர்த்து, மியன்மார், பங்களாதேஷ் மற்றும் இந்தியா வழியாக மாற்றியுள்ளது.
இதற்கிடையே, தாய் ஏர்வேஸ் நிறுவனம், ஐரோப்பா மற்றும் தெற்காசியாவிற்கான விமானங்கள் இன்று அதிகாலையிலேயே மாற்றப்பட்டதாக அறிவித்துள்ளது. மேலும் சில விமானங்கள், தாமதமாகலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனா ஏர்லைன்ஸ் – பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்புக்காக அவசர திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இன்று செல்லவிருந்த லண்டன் நோக்கிய விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதேவேளை , இதற்கு முன் ரஷ்யாவை மையமாகக் கொண்டு செல்லப்பட்ட விமானங்கள், தற்போது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவின் மேல் வழியாக சென்ற நிலையில், தற்போது அந்த வழியிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.