இலங்கைக்கு இந்த ஆண்டில் அதிக கடன் வழங்கிய நாடு இதுதான்! ஆய்வில் வெளியான தகவல்
இலங்கை அண்மைக்காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவருகின்றது.
மேலும் எரிபொருள் நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
இவ்வாறான நிலையில் இந்த ஆண்டில் இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா, சீனா, ஜப்பான் என பல்வேறு நாடுகள் கடனுதவி வழங்கி வருகின்றன. அத்துடன் ஆசிய வளர்ச்சி வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்த கடன்கள் தொடர்பாக கொழும்பு நகரை மையமாக கொண்டு இயங்கி வரும் 'வெரிட் ரிசர்ச்' என்ற ஆய்வு அமைப்பு ஆய்வு செய்து உள்ளது.
இதில் இந்த ஆண்டில் இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக இந்தியா உருமாறி வருவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் இலங்கை பெற்ற 968 மில்லியன் டாலர் வெளிநாட்டு கடனில், இந்தியா 377 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,800 கோடி) வழங்கி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு அடுத்ததாக ஆசிய வளர்ச்சி வங்கி 360 மில்லியன் டாலர் கடன் வழங்கி இருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
கடந்த 2017 முதல் 2021-ம் ஆண்டுகளுக்கு இடையேயான காலகட்டத்தில் இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக சீனா இருந்துள்ளது.
ஆனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சக்கட்டத்தில் இருக்கும் இந்த ஆண்டில் கடன் வழங்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.