இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சு: சொற்ப ஓட்டங்களில் சுருண்ட இலங்கை அணி!
2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை 302 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை பெற்றுள்ளது.
இந்த போட்டி இன்றையதினம் (02-11-2023) பிற்பகல் 2.00 மணியளவில் மும்பையில் உள்ள வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகியது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 357 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 92 ஓட்டங்களையும், விராட் கோலி 88 ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 82 ஓட்டங்களையும், பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தில்ஷான் மதுஷங்க 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி, 358 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 55 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் கசுன் ராஜித்த 14 ஓட்டங்களையும், ஏஞ்சலோ மெத்தீவ்ஸ் 12 ஓட்டங்களையும் மற்றும் மஹீஸ் தீக்ஷன 12 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுக்களையும், முகமது ஷமி 5 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.