ஆயுளை அதிகரிக்க செய்யவேண்டுமா? 10 நிமிடங்கள் இதனை செய்யுங்கள்!
நீங்கள் 10 நிமிட நடைப்பயிற்சி செய்வதனால் அது உங்கள் ஆயுளை அதிகரிப்பதாக, அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
5,000 நடுத்தர மற்றும் வயதான அமெரிக்கர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில், உடற்பயிற்சியின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க, உயிரிழக்கும் அபாயம் குறைவது தெரியவந்துள்ளது.
நாளொன்றிற்கு 10 நிமிட, மிதமான நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சி, 40 முதல் 80 வயது உள்ளவர்கள் உயிரிழக்கும் அபாயத்தை ஆண்டொன்றிற்கு 7 சதவிகிதம் அளவுக்கு குறைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வாழ்க்கை முறையில் செய்யப்படும் சிறியதொரு மாற்றம், ஆண்டொன்றிற்கு 100,000 அமெரிக்கர்களின் உயிரைக் காப்பாற்றக்கூடும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள்.
மேலும், உடற்பயிற்சி செய்யும் அளவை, தினமும் 10 நிமிடங்களிலிருந்து 20 முதல் 30 நிமிடங்களாக அதிகரிப்பது, உயிரிழக்கும் அபாயத்தை, முறையே 13 முதல் 17 சதவிகிதம் வரை குறைப்பதாக தேசிய புற்றுநோய் ஆய்வமைப்பு தெரிவித்துள்ளது.

அதேசமயம் பிரித்தானியர்களைப் பொருத்தவரை, வாரம் ஒன்றிற்கு 150 நிமிடங்கள், சைக்கிள் ஓட்டுதல் போன்ற மிதமான உடற்பயிற்சி செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஆக, மொத்தத்தில், வயதானாலும் சிறிய அளவிலாவது உடற்பயிற்சிகளை செய்துகொண்டே இருப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது என அந்த ஆய்வை முன்னின்று நடத்திய Dr Pedro Saint-Maurice என்பவர் கூறுகின்றார்.