பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!
இலங்கையில் உள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வு வழங்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பள உயர்வு தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் (12-08-2024) சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இறுதித் தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வாக்கெடுப்பு மூலமாக 1700 ரூபா சம்பளம் வழங்கத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பின் போது சம்பள உயர்வுக்கு ஆதரவாக 14 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக 3 பெருந்தோட்ட நிறுவனங்கள் வாக்களித்துள்ளன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், வருகை ஊக்குவிப்பு விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு விவகாரம் உயர்நீதிமன்றத்துக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் உள்வாங்கப்பட்டு, 1700 ரூபா சம்பளம் உயர்வைப் பெற்றுத்தர முழு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி ரணில், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை முன்மொழிந்தது போல் அதனை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் முழுப்பொறுப்பும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு உள்ளது என்றும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும் 1700 ரூபா சம்பளம் கிடைக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.