பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு; கல்வியமைச்சின் அதிரடி நடவடிக்கை!
பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு ஆளாவதைத் தடுப்பதற்கும், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் விழிப்புணர்வை மேலும் விரிவுபடுத்துவதற்கும் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளை மேலும் திறம்பட முன்னெடுப்பதற்கும் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இந்நிலையில் கல்வி அமைச்சர் பிரேமஜயந்த பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. பாடசாலை முறையின் தற்போதைய நிலை தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இன்று கல்வியமைச்சில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்றிருந்தது.
அத்துடன் பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடை விநியோகம் தொடர்பிலான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் டெங்கு தொற்றுநோயை கட்டுப்படுத்தும் முறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது பாடசாலைகளில் மதிய உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து இங்கு கேட்டறிந்ததுடன், சத்துணவுத் திட்டம் எதிர்காலத்திலும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டின் முதலாம் தவணை தொடக்கத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுவதுடன், தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு அதனை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.