வவுனியாவில் சி.ஐ.டி என்று பொது மக்களை ஏமாற்றியவர் பொலிஸாரால் அதிரடி கைது!
பொலிஸ் சி.ஐ.டி என தன்னை அறிமுகப்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி பணம் பெற்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு சென்ற நபரொருவர் குறித்த வீட்டில் உள்ள மகன் தொடர்பாக மகனின் தாயாரிடம் தெரியப்படுத்தி தன்னை சி.ஐ.டி என அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக அவர்களுடன் பேசி மகனை வைத்து பணம் பெற்றுள்ளதுடன், பொலிஸில் இருந்து தனக்கு கிடைத்த யூரியா பசளை தருவதாகவும் கூறி பணம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் பசளையும் வழங்காது தொலைபேசி அழைப்பை ஏற்க மறுத்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸில் பாதிக்கப்பட்டவர் தெரியப்படுத்தியிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பணம் பெற்ற குறித்த நபர் சி.ஐ.டி இல்லை என்பதை உறுதிப்படுத்தியதுடன் அவரை கைது செய்துள்ளனர்.
வவுனியா, இறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
மேலதிக விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.