வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் 9 வயது சிறுமி பலி
வவுனியா, அலகல்லு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒன்பது வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கல்குண்ணாமடு பகுதியை சேர்ந்த ஆக்சரசினி என்ற சிறுமியே விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி அவரது சிறியதாயுடன் முச்சக்கர வண்டியில் பயணித்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டே முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் முச்சக்கரவண்டியில் இருந்து தூக்கிவீசப்பட்ட சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சிறுமியின் சிறியதாய், முச்சக்கரவண்டி சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.