இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்த முக்கிய கோரிக்கை!
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினருக்கு, சலுகை அடிப்படையில் எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார். இன்றைய தினம் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஆரம்பமான நிலையில், குறித்த பரீட்சை கடமைகளுக்கு செல்லும் பணிக்குழாமினருக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
எனினும், அது முறையாக செயற்படுத்தப்படாமையினால் ஆசிரியர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இதேநேரம், கிளிநொச்சி - பளை பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பாடசாலை மாணவி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவி தமது தாயாருடன் காணியொன்றை, துப்பரவு செய்ய முற்பட்ட போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவத்தில், குறித்த மாணவியின் காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
அவர், இந்த முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.