தலதா மாளிகை யாத்திரை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தலதா மாளிகை யாத்திரைக்காக மோசடியான வகையில் நிதி திரட்டும் நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அஸ்கிரிய மகா விகாரையின் பிரதி பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர் அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.
தலதா மாளிகை யாத்திரைக்கான நடவடிக்கை மற்றும் செயற்பாடுகள் அரசாங்கத்தினால் கண்டி மாநகர சபை மற்றும் தலதாமாளிகைக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலதா மாளிகை யாத்திரை
இதுதவிர, வேறு எந்த தரப்பினருக்கும் அது தொடர்பான பொறுப்பு கையளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தலதா மாளிகை யாத்திரை அடுத்த மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், தலதா மாளிகை யாத்திரைக்கு நிதி திரட்டுவதற்குப் பங்களிக்குமாறு ஒரு குறிப்பிட்ட தரப்பினரால் சமூக ஊடகங்களில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், இந்த பிரசாரமானது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என தலதாமாளிகை தெரிவித்துள்ளது. தலதா மாளிகை யாத்திரைக்காகத் தனிப்பட்ட ரீதியில் எந்தவொரு நபரும் நிதியளிக்க வேண்டாம். அவ்வாறான செயற்பாடுகள் இங்கு இடம்பெற முடியாது.
ஆகவே, தனிப்பட்ட ரீதியில் நிதியளித்து ஏமாற வேண்டாம் என அஸ்கிரிய மகா விகாரையின் பிரதி பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.