அமைச்சர் பந்துல வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!
சந்தையில் நிலவும் லாப் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு இவ்வாரமளவில் தீர்வு வழங்கப்படும். லாப் எரிவாயு சிலிண்டருக்கு பதிலாக லிட்ரோ எரிவாயு சிலிண்டரை விநியோகிக்க முடியுமா என்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்தார்.
சந்தையில் அத்தியாவசிய உணவு பொருட்கள், சமையல் எரிவாயு ஆகியவற்றிற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாகவே லாப் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தற்போது நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
லாப் எரிவாயு விநியோக நிறுவனத்தினர் தற்போதைய விலையேற்றத்திற்கு அமைய குறைந்தபட்சம் 200 ரூபாயிலிருந்து எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
தற்போதைய நிலையில் எரிவாயு விலையேற்றத்திற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது. எரிவாயு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நிதியமைச்சினால் சிரேஷ்ட குழு நியமிக்கப்பட்டது.
இக்குழுவின் அறிக்கை இவ்வாரம் சமர்ப்பிப்பிக்கப்படவுள்ளது. எனவே லாப் எரிவாயு தொடர்பிலான பிரச்சினைக்கு இவ்வாரம் தீர்வு வழங்கப்படும். லாப் எரிவாயு சிலிண்டருக்கு பதிலாக லிட்ரோ சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியுமா என்பது குறித்து தொடர்புடைய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.