பெற்றோரிடம் நிதி வசூலிப்பதை உடனடியாக நிறுத்துங்கள் ; பிரதமர் ஹரிணி
புதிய கல்வி மறுசீரமைப்புக்கு தேவையான ஸ்மார்ட் பலகைகளை கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு விநியோகிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அதற்காகப் பாடசாலை மட்டத்தில் பெற்றோரிடம் நிதி வசூலிப்பதை உடனடியாக நிறுத்துமாறு, பிரதமர் ஹரிணி அமரசூரிய கோரியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொழில்நுட்ப அறிவு
அத்துடன், இலவசக் கல்வியைக் குறைப்பதற்கோ அல்லது ஸ்ரீ ஜயவர்தனபுர பல் மருத்துவ பீடத்தை மூடுவதற்கோ எந்த வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதமர் இதன்போது கூறியுள்ளார்.
அத்துடன், 1 முதல் 5 வரையான தரங்களுக்குத் தகவல் தொழில்நுட்பம் தனிப்பாடமாகக் கற்பிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தொழில்நுட்ப உலகத்துடன் இணைந்து பயணிப்பதற்காக, ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்கும் ஏற்றவாறு தொழில்நுட்ப அறிவை வழங்குவது குறித்து நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.